சுமைகள் தாங்கி குறைகள் நீங்கி
சுகமும் பொங்கி பெருமை வாங்கி வழங்கிட வேண்டும்.
சாதி தவிர்த்து மீதி பிடித்து
நீதி படித்து நித்தமும் இனித்து ஒன்றிட வேண்டும்.
காரணம் கொண்டு காரியம் கண்டு
வீரியம் ஒண்டு வீரமும் உண்டு முடித்திட வேண்டும்.
பண்பில் பார்த்து அன்பில் சிலிர்த்து
அறிவினில் திகைத்து அறவே காதலித்து கலந்திட வேண்டும்.
நாணம் துறந்து நாலும் திறந்து
காமம் சிறந்து நாளும் இறந்து பிறந்திட வேண்டும்.
அன்பு காட்டி ஆசைப் பூட்டி
அறிவு கூட்டி குழந்தை குட்டி வளர்த்திட வேண்டும்.
மண்ணில் ஆயிரமாயிரம் உறவுகள் கண்டு
மானுடர் யாவரும் நண்பராய் கொண்டு (வாழ்ந்திட வேண்டும்.)
பெரும்பலர் போற்றி ஒருசிலர் தூற்றி
அனைவரும் அன்புடன் வாழ்த்தி நெற்றி உயர்ந்திட வேண்டும்.
மடமையை ஒழித்து மதங்களை உடைத்து
உரிமையை எடுத்து கடமையில் களித்து நிலைத்திட வேண்டும்.
பலகலை கற்று சிலகலை கற்பித்து
தலைக்கன மற்று உலகினை புதிப்பித்து வளர்ந்திட வேண்டும்.
பாசாணம் விட்டு பயிர்களை இட்டு
பாசனம் சொட்டு இயற்கையுடன் எட்டு வைத்திட வேண்டும்.
மோகம் அழித்து கானகம் என்
தாயகம் அமைத்து நாயகன் நான் ஆகிட வேண்டும்.
பாபல பாடி கதைகளைப் பேசி
மாபல வாழை இவைகளை இரசி புசித்திட வேண்டும்.
உடலுக்குத் தேவைகுன்றி சாவேயன்றி சுதந்திரம்
உலகுக்கு தொல்லையின்றி எல்லையின்றி நிரந்தரம் ஆகிட வேண்டும்.
நான் நிரந்தரம் ஆகிட வேண்டும்!