அதி காலை, உதரி எழுந்து நின்றேன்...
ரதி, வாலைக் குமரி, செவ்வுடை கண்டேன்.
இன்புற்று, இலகிப் போய், நின்றேன்.
இனியவளுடை இலகிப் போக, கண்டேன்.
பூண்ட உடை மீண்டதால், நாணுடை
பூண்டாள். அதைக் கண்டதால், நானும் விடை
பெற்றேன், உள்ளுயிர் துடிக்க, மெய்
ஏனோ வெடிக்க, நாணப் பொய்யோடு.
மாலை மீண்டும் கண்டேன், என்
மானை. கண்(ட) ணசையாது நின்றேன்.
வெளுத்த அவள் இடையை,
தழுவியது கருத்த உடை.
நான் நாடிய ஒரு நொடி,
அவள் நாணிய சிறு கொடி...
உடை இடை நழுவியதால்.
உயிர் உடல் கண்டதால்.
நான் களித்து சிரித்தது ஒரு நொடி,
அவள் கடிந்து ஒளித்தது, பெருவெடி...
இத்தனை சினம் என் மேலேனடி?
இதற்கு (பொ)போய் அழுவான் ஏனடி?
- பாரதிக் கண்ணன்.
வழக்கமான விளக்கம் : -
காலைல கொசு மற்றும் கனவுத் தொல்லைனால எந்திருச்சேன். சூரிய ஒளில்ல சும்மா கும்முன்னு இருந்தா, என் காதலி. வானம். மெதுவா மறைஞ்சுச்சு, அந்த சிகப்பு வண்ணம்... எனக்குள்ள ஏதேதோ எண்ணம், உடம்புக்கு தெம்பா இருந்துச்சு. இருந்தாலும் வந்துட்டேன், வேலை ஏதோ செய்யப் போற மாதிரி... சாயங்காலம் மறுபடியும் வெட்டியா வேடிக்கை பாத்திட்டுருந்தேன், (வேரென்ன வேலை?) திடீர்ன்னு மேகம் மூண்டுச்சு. (எனக்குள்ள கவிதா மோகம் தூண்டுச்சு... அதான் இது!) வெள்ளை வானத்த, கருப்பு மேகம் மூடுச்சு..... வெளிச்சம் வராதான்னு நினைச்சேன்... பளீர்ன்னு வந்துச்சு பவர் சோப்போட வெள்ளையா ஒரு மின்னல், ஒரே ஒரு நொடிதான்... (என்ன வெக்கமோ?) சந்தோஷமா நான் சிரிச்சேன் (அதுல என்ன குத்தமோ?) டுமீல்னு ஒரே இடிதான்..... இதுக்குப் போய் கோபமான்னு கேட்டேன்... அவ்வளவுதான், பொசுக்குன்னு அழுதிட்டா...
“இது தப்புனா மன்னிச்சுடுங்க...”. தெரிஞ்சே நான் தப்பு செய்யல, சூழ்நிலை, சூன்யம் பன்னீடுச்சு. தயவு செயஞ்சு அவகிட்ட சொல்லி புரிய வைங்க... இப்பயெல்லாம் என்னை பாத்தா சிரிக்க்க் கூட மாட்டேங்குறா... அவள் உக்ரமும் உஷ்ணமும் தாங்கல. நீங்கதான் என் காதலோட ஆழத்தை சொல்லனும், அவகிட்ட... என் மேல, அவளுக்கு கோபம் இருக்காதுல... என் காதல் ஜெயிக்கும்ல...
Subscribe to:
Post Comments (Atom)
it took me 10 minutes to read..yet to comprehend ..un thollai thaangalaia..
ReplyDelete