My blogs, Brags all here.

Friday, July 27, 2018

மரிக்கும் மனிதம்

நல்லவைகளுக்கும் அல்லவைகளுக்கும் இடைவிடாது நடக்கும் ஒரு நீண்ட நெடிய போரே வாழ்க்கையாகும். போரென்றாலே உலக விதிகளுக்கும், நம் மதிகளுக்கும் அப்பாற்பட்டுதான் நடக்கும்.

அப்படியொரு போர்தான் 1939 முதல் உலகில் நடந்தேறியது. ஒரேயொரு வேறுபாடுதான்... இப்போரில் அனைவரும் நல்லவரே... அனைவரும் அல்லவரே... எவை நல்லவையென்றும் அல்லவையென்றும் ஆராய்ந்து பார்க்க எவருக்கும் நேரம் இல்லை.


இடம்: காமோ ஏரியின் அருகே.        நாள்: 27-04-1945





 இயற்கை எழில் பொங்கும் காமோ ஏரியின் அருகே வேகமாக சென்று கொண்டிருக்கிறது சில மகிழுந்துகள். மகிழுந்தினுள் மகிழ்ச்சி ஏனோ இல்லை. ஒரு விதமான இருக்கமான சூழல். அச்சம் சொல்வதைத் தவிர மிச்சமொன்றும் புரிவதாயில்லை. 

மேகம் தூவும் மாரியை மரம் வந்து மறிப்பது போல், வேகம் செல்லும் வண்டிகளை துப்பாக்கி ஏந்திய கம்யூனிசக் கிளர்ச்சியாளர்கள் தாக்கி வழி மறிக்கின்றனர். உள்ளிருப்பவர்களை வெளியிறங்கச் சொல்கிறார்கள்.

ஜெர்மானியப்படை சீருடை அணிந்திருக்கும் ஆளைக் கண்டதும் அவர்களின் கண்ணில் ஒரு பெருமகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியானது,  பால்கொடுக்க வந்தத் தாயைப்  பார்த்த பச்சிளங்குழந்தைக்கு வரும் மகிழ்ச்சியல்ல. பஞ்சு மிட்டாயைக் கண்டவுடன் அஞ்சு வயது சிறுமிக்கு வரும் மகிழ்ச்சியல்ல. துள்ளி வரும் பள்ளிமானைக் கண்டவுடன் பசியில் வாடும் புலியின் மகிழ்ச்சியுமல்ல. மற்ற மிருகங்களையெல்லாம் மீறி வளர்ந்து நிற்கும் மனிதனுக்கே உண்டான தனி மகிழ்ச்சி. 

அந்த மனிதனையும் அவனுடன் வந்த அனைவரையும் கைது செய்து செல்கிறார்கள், கிளர்ச்சியாளர்கள் / போராளிகள். அந்த மனிதனின் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் கண்டறிய முடியவில்லை.



பாசிசம் என்றவொரு தத்துவார்த்தம் வேரூன்றி வளர்ந்ததற்கு முக்கிய காரணம், அந்த மனிதன்தான் - பெனிட்டோ முசோலினி

இரண்டாம் உலகப்போர் முதல் இன்றுவரை கொடுங்கோல் கொண்டு ஆட்சி செய்வதென்றால் அனைவரின் எண்ணங்களிலும் முதலில் தோன்றுவது ஜெர்மானிய அடால்ஃப் ஹிட்லர்தான். உண்மையில் ஹிட்லருக்கே சர்வாதிகார ஆட்சிமுறையை கற்றுத்தந்தது முசோலினி தான். 

முசோலினியின் ரோம் முற்றுகையும் அதன் வெற்றியும் தான், ஹிட்லருக்கும் மூனிக் முற்றுகையை மேற்கொள்ள ஊக்கமளித்தது. 

முசோலினியின் ஆட்சிக்காலம் என்பது மிகவிரைவில் சர்வாதிகாரத்தை நோக்கி சென்றது. தனிமனித உரிமைகள் எல்லாம் காற்றோடு போனது. ஏன் என்ற குரல்கள் எல்லாம் நெறிக்கப்பட்டன,  உயர்ந்த கைகள் எல்லாம் ஒடிக்கப்பட்டன, நிமிர்ந்த நெஞ்சங்கள் எல்லாம் நசுக்கிக் கொல்லப்பட்டன. 


கைது செய்யப்பட்வர்களுள் முன்னாள் முக்கிய மந்திரிகளும் இருந்தனர். அவர்களுடனே இருந்தாள் முசோலினியின் அப்போதைய துணைவியான கிளாரா பெட்டாசி. அவளின் எண்ணங்களை என்னவென்று புரிந்துகொள்ள யாருமில்லை. எவரும் முயற்ச்சிக்கவுமில்லை. 

இரவு கழிவதாயில்லை, எவருக்கும். இன்னும் இம்மி இருகினால் இதயமே நின்று விடும் போல் இருந்தது, கிளாராவிற்க்கு. 




இடம்: மெஸ்ஸேக்ராவில்.      நாள்: 28-04-1945        
வேகமாக வந்து நின்ற மகிழுந்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர் கிளாராவும், முசோலினியும். வாழ்வின் இறுதிக்கட்டம் என்றுணர்ந்த போதிலும் ஏதோவொன்று இழுத்துச்சென்றது அவளை. 

கம்யூனிச போராளிகள் முசோலினியின் குற்றங்களுக்கான தண்டனை மரணம் என உச்சரித்தார்கள். 

உச்சரித்த வார்த்தைகளை உள்வாங்குவதற்கு முன் உணர்ச்சிகள் உச்சத்தை எட்டியது கிளாராவிற்கு. உள்ளமே வெடித்தது, கண்ணீரோ வெள்ளமாய்ப் பொங்கியது. அருகே இருந்த முசோலினியின் மீது பாய்ந்து, தன் கரங்களால் அவனைக் காக்கும் வண்ணம் கட்டியணைத்து கூக்குரல் இட்டாள், "இல்லை, இவர் இறக்கக் கூடாது... இல்லை... இல்லை" என்று.

சட்டென்று ஒரு துப்பாக்கி இரவை பாய்ந்தது. பாய்ந்த மாத்திரத்தில் அவளின் சத்தமும் ஓய்ந்தது. அவள் கீழே விழுந்தாள். மரித்தாள்.

கண் முன்னே அவள் உயிரற்று விழுந்ததைக் கண்ட முசோலினி உரக்கத்தில் இருந்து எழுந்தவனாய் உளறினான். தன் சட்டையை கிழித்து "என் நெஞ்சில் சுடுங்கள் என்னை" என்று முழங்கினான். இத்தாலியிலும் பல்வேறு இடங்களிலும் முழங்கிய அவனின் குரல் கடைசியாக ஒலித்தது அப்போதுதான். ஒரு நாட்டையே தன் நாவினால் வென்ற அவன் கடைசியாக முழங்கியது அப்போதுதான். தோட்டாக்கள் துளைத்தது அவன் உடலை. 





இடம்: மிலானில் ஒரு சதுக்கம்   நாள்: 29-04-1945

இன்றும் இத்தாலியில் புகழ்பெற்ற ஒரு இடம்தான் மிலான். விடியாத அந்தக் காலைப் பொழுதில் ஊரே திரண்டு வந்தது, தம்மை ஆண்டு வந்த கொடிய ஆட்சியாளனின் சடலம் வருகின்றது என்று. 

அந்த முக்கிய சதுக்கத்தில் சடலங்கள் தூக்கி எறியப்பட்டன, இரைச்சியுண்ட பின்பு எறியப்படும் எலும்புத் துண்டுகளைப்போல. கூட்டத்தில் ஒரு சலசலப்பு. ஆங்காங்கே வசை மொழிகள் தொடங்குகின்றன, மக்கள் தங்களுக்குள்ளாக பேசிக்கொள்கிறார்கள்; சிலர் அழத்துவங்குகின்றனர், சிலர் ஆர்ப்பரிக்கின்றனர். அதில் ஒரு கை மட்டும் ஒரு கல்லை எடுக்கின்றது. அதை சடலங்கள் மூது எறிகின்றது. பலக் கற்கள் பின் தொடர்கின்றன. 

பின்பு அருகே சென்ற ஒரு வாய் உமிழ்கின்றது. ஆட்டுக்குட்டிகளைப்போல் செய்வதறியாது பலவும் பின் தொடர்கின்றன்.

ஒரு ஆணுருப்பு மட்டும் சிறுநீர் கழிக்கின்றது, சடலங்களின் மீது. சற்றும் நாணமின்றி பலவும் பின்பற்றின.

இறந்தவுடல் மீது இன்னும் வந்து பாய்ந்தன துப்பாக்கி இரவைகள். 

இன்னும் பல இன்னல்களை இழைத்த பின்பு களைத்தது, அந்த மக்கள் கூட்டம். ஆனாலும் கலையவில்லை. 




கறிக்கடையில் தொங்கும் ஆடுகளே நாணிக் குறுகுவது போல் சடலங்களை எடுத்து தலைகீழாக தொங்கவிட்டனர். உயிருடன் இருந்த பொழுது அறை முழுவதும் ஆடைகளாய் நிரம்பி வழிந்த அந்த மனிதர்களின் சடலங்கள் இன்று அரை நிர்வானமாய் தொங்கின. 

ஆண்களாய் இருந்த சடலங்கள் கால் சட்டை அணிந்து இருந்தன. பாவாடை அணிந்து இருந்த கிளாராவின் சடலம் சற்றுப் பாவப்பட்டதாகவே இருந்தது. ஆடைகள் கலைந்து அவளின் மார்பகம் வரை வெளித் தெரிந்தது. 

கட்டுக்கு அடங்காமல் களேபரம் செய்த அந்தக் கூட்டத்தில் உள்ளிருந்த ஒரு மூதாட்டி, முன்னே வந்தால். அங்கே அதிகமாக கூச்சிலிட்டுக் கொண்டிருந்த ஒருவனை அழைத்து அதிகாரமாக கிளாராவின் சடலத்தை கீழிறக்கச் சொன்னாள். 

சிறிது காலத்திற்கு முன் இதே முசோலினியின் பாசிசப் படைகளால் இதேயிடத்தில் கொலை செய்யப்பட்ட தன் பேரனும் பேத்தியும் தான் அந்தக்கிழவிக்குத் தெரிந்தார்கள். ஒரு கொடுங்கோலனோ, அவனது காதலியோத் தெரியவில்லை. 

அந்த சடலத்திற்கு கால் சட்டை அணிவித்து, மார்புச்சட்டை விலகாதவாரு ஒரு ஊசியும் குத்தி விட்டாள். அதை செய்த பின்பு அவ்விடம் விலகிச் சென்றாள். 

மனிதத்தை மற்றவருக்கு சொல்லித் தந்துவிட்டு சென்றாள். நல்லவை அல்லவைகள் மட்டுமே இருப்பதாய் தோன்றும் இந்தவுலகினில் நல்லவை தோன்றுவது நம்மில் இருந்துதான் எனச் சொல்லாமல் சொல்லிச் சென்றாள், மனிதத்துடன்.

மனிதர்கள் மரித்து சடலங்களாவது உண்டு. மரிக்காது மனிதம்.


 

No comments:

Post a Comment

Thank you for your feedback. I value it!