My blogs, Brags all here.

Saturday, May 24, 2014

ஒரு நாத்திகனின் வாக்குமூலம்

நான் ஒரு நாத்திகன் என்பது நானறிந்த உண்மை... என்னை அறிந்தவர்கள் அறிந்த உண்மை... நான் தரப் போகும் வாக்குமூலம் தங்களில் பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். குறிப்பாக எனது நாத்திக நண்பர்களுக்கு. மேலும் எனது ஆத்திக நண்பர்கள் ஆனந்தம் கூட படக்கூடும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை எனது வாக்குமூலத்தின் மூலம் வாசிப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடும். 

இது இன்று நடந்த ஒரு சம்பவம். 24-05-2014 நள்ளிரவு முடிந்து 25-05-2014 விடியாத காலை சுமார் 01:05 மணியளவில், என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன், பாட்டி என அனைவரும் உறங்கிய பின்னர், யாரும் எழாதவாறு அரவம் ஏதும் செய்யாமல் நான் மட்டும் எனது கைபேசியை எடுத்துக் கொண்டு காற்று பதனாக்கி (Air Conditioner) பொறுத்தப்பட்ட படுக்கை அறையை விட்டு வெளி வந்தேன். படுக்கை அறையை விட்டு வெளி வந்து எனது கைபேசியில் உள்ள மின்விளக்கை இயக்கினேன். படுக்கை அறைக்கு வெளியே வந்ததும் இருப்பது ஒரு சிறிய பாதையா அல்லது மிகச்சிறிய அறையா என்று விளங்காதவாறு இருக்கும் ஒரு சிறிய இடம். அவ்விடத்தில் இருந்து எதிரே அதாவது மேற்கு பக்கம் இருக்கும் மற்றொரு படுக்கை அறைக்கும் செல்லலாம், இடப்பக்கமாக, அதாவது தெற்கு பக்கம் இருக்கும் கழிவறை / குளியலறைக்கும் செல்லலாம், வலது பக்கம் / வடப்பக்கம் இருக்கும் ஹாலுக்கும் செல்லலாம். இருட்டாய் இருந்த அவ்விடத்தில் எனது கைபேசியின் மின்விளக்கானது எப்படி இடைக்கால சமயத்தில் மேற்கத்திய நாடுகளை இருண்ட காலத்தை விட்டு மறுமலர்ச்சியம் சீர்திருத்தமும் வெளிச்சத்திற்கு கொண்ர்ந்ததோ அப்படி வெளிச்சத்திற்கு கொணர்ந்தது.



வாசிப்பவர்கள் பொறுமை இழப்பதற்குள் நான் அங்கிருந்து வந்து விடுகிறேன். ஆம் அந்த இடத்தை விட்டு நான் வலப்பக்கமாக ஹாலுக்கு வந்துவிட்டேன். பக்கத்து அடுக்குவீட்டின் விளக்குகளில் இருந்து சாளரத்தின் வழியே ஒளிக்கீற்றுகள் குறுக்கும் நெடுக்குமாய் வந்து ஹாலை நிறப்பி கொண்டிருந்தது. அறிவியல் வளர்ச்சி அடைந்த பின்பும் அன்று நாம் தெய்வ செயல்கள் என்று நம்பிக் கொண்டு இருந்த பலவற்றின் காரணங்கள்  புரிந்த பின்பும் மனிதர்களுக்கு மதம் என்னும் வழியும் தெய்வம் என்னும் வழிகாட்டியும் எப்படி தேவை படுகிறதோ அதேபோல் எனக்கும் என் கைபேசியும் அதன் மின் விளக்கும் தேவைப் பட்டது.  வெளிச்சக்குறைவினால் அல்ல... என் பழக்கத்தினால், என் வழக்கத்தினால், என் வழுவினால். 

எப்படியோ நன்றாக கண் தெரிந்த பொழுதிலும் மின்விளக்கின் குறுகிய ஒளியினால் எதிரே இருந்த பொருட்களின் நிழல் என் பாதையில் விழுந்து மரிக்க, அது என் பாதையை என் கண்ணளவில் மறைக்க, தடுமாறியபடியே நடந்தேன். தங்களிடம் மறுமலர்ச்சி என்று கூறியவுடன் தான் எனக்கே ஞாபகம் வந்தது எப்படி மேற்கில் மறுமலர்ச்சி ஏற்பபட்டதற்கு ஆட்டோமன் துருக்கியர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறதோ அதே போல்... கிழக்கில், அதாவது நமது தென்னிந்தியாவின் முகமலர்ச்சியை தக்க வைப்பதில் அரபியரகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது.




அரபியர்கள்

ஏன்? எப்படி என்று யோசிக்கிறீர்களா?

அதிகம் யோசிக்க வேண்டாம். அதெல்லாம் என்னை போல் விடிய விடிய ரூம் போட்டு உக்காந்து யோசிப்பவர்களுக்குதான் அப்படிப்பட்ட அசட்டுத்தனமான அசாத்திய உண்மைகள் புரியும். அதை நானே கூறிவிடுகிறேன். தென்னிந்தியர்களில் பலர் காஃபி குடிப்பவர்களே. என்னை போன்ற முரட்டு தேனீர் பிரியர்களுக்கும் காஃபி என்றால் ஒரு அலாதியான ஆசைதான் குறிப்பாக ஃபில்டர் காஃபி என்றால் சொல்லவே வேண்டாம். ஐந்து நாடுகளில் இயங்கும் இன்றைய இந்திய கஃபே காஃபி டே, அறுபத்தி நான்கு நாடுகளில் விலைபோகும் அமெரிக்க ஸ்டார்பக்ஸ் எல்லாம் பிறப்பதற்கு சுமார் 350 ஆண்டுகள் முந்தைய வரலாறு அந்த அரபிய காஃபியின் வரலாறு. அதிகம் நீளும் என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு முன்னே நான் கூறியதை இப்போது விளக்குகிறேன். நம்மவர்களில் அநேகர் அருந்தும் காஃபியை ஒரு நாள் பருகாவிட்டால் அவர்களின் முகம் ஆனது காற்று இறங்கிய கால்பந்தை போல் சுருங்கி விடும். இப்போது தெரிகிறதா நம்மவரின் முகமலர்ச்சிக்கு அரபியர்கள் எப்படி முக்கிய காரணம் என்று.



மூக்கு புடைப்பா இருந்தா இப்படி யோசிக்கத் தோணும்னு நீங்கள் புலம்புவது என் காதிலே கேட்பதால் அந்த அறையில் தடுமாறிக் கொண்டே முன் செல்கிறேன். இவ்வளவு நேரம் நான் கூறிவந்த அந்த பெருமைமிக்க காஃபியை தயார் செய்து பருகுவதற்காக சமையலறையை அடைந்தேன். பால் எடுத்து அடுப்பில் வைத்து, ஞான தீபம் ட்ரஸ்ட் கோப்பை எடுத்து சக்கரை டிகாஷன் எல்லாம் சேர்த்து கலக்கி விட்டு அங்கும் இங்கும் பார்த்த அங்குவாய்(Angu) நான் நெளி்ந்தேன். திடீரென்று எனக்கு ஏனோ அந்த சமையலறையில் ஒரு வெறுமை தோன்றியது. ஏதோ எனக்குள் ஒரு சக்தி இல்லையென்று புலப்பட்டது. சிறு வயதில் காரைக்கால் அம்மையார் படம் பார்க்கையில் கையை நீட்டியவுடன் மாங்கனி வந்தது. அப்படியொரு சக்தி என்னிடம் இல்லையென்ற செய்தி நீரில் நினைந்த ஜீன்ஸ் பேன்டாய் கனத்தது. என்னால் நகரவே முடியவில்லை. எனக்குள் ஒரு ஆத்திரம், ஏமாற்றம் பலவீனம் எல்லாம் எழுந்தது. அப்போதுதான் சேற்றில் முளைத்த செந்தாமரையாய், ஐயய்யோ... வரவர தாமரைனு சொன்னாலே பா.ஜ.க, மோடினு மிரட்டல் பேச்சு பேச ஆரம்பிச்சுடுறானுக... சரி சாணத்தில் முளைத்த காளானாய் எனக்குள் ஒரு யோசனை உதித்தது. உடனே வெளிவந்து சாமிகளுக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அந்த சிறிய அலமாரிக்கதவை திறந்தேன். திறந்தவுடன் என் கண்ணில் பட்டது, நான் சிறிய வயதில் மிகவும் விரும்பி வணங்கிய அணுமனின் உருவப்படம். அந்த குறிப்பிட் படமானது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீற்றிருக்கும் மாருதியின் ஐவகை அலங்காரம் கொண்ட படமது. உடனே என் நினைவுக்கு வந்தது ஐவரில் ஒருவராகி, ஐந்தினில் ஒன்றைத் தாவி, ஐந்து கை-கால்-வால் கொண்ட அணுமனுக்கு ஐவகை அலங்காரங்கள் எவ்வளவு பொருத்தம் என்பது தான். கூடவே என் தந்தை சொல்லிக் கொடுத்த அந்த "ஐந்தினில்..." பாட்டை நான் மறந்துவிட்டேன் என்றும் ஞாபகம் வந்தது. அப்படியே ஒரு நொடி நான் தேடியவுடனே கிடைத்தது. அந்த சக்தி... ஆம்... என்னில் இல்லாத அந்த மாபெரும் சக்தி. அக்கணம் அகலாது கனத்தது. ஆறடியும் உயமும் சுமார் நூற்றியெட்டு கிலோவும் கனக்கும் என்னிடம் இல்லாத ஒரு சக்தி... அந்த சிறிய சைக்கிள் பிராண்ட் தீப்பெட்டிகளில் உள்ளதென்று.



நான் தேடிய சக்தி கிடைத்ததால் அடுப்பை பற்ற வைத்து, பாலை சுட வைத்து காஃபி கலந்து விட்டு இதோ என் அறைக்கு மீண்டும் வந்து கணினியை தட்ட ஆரம்பித்து விட்டேன். அச்சச்சோ... மறந்தே போய் விட்டேன். இதோ எனது வாக்குமூலம். நான் இல்லாத கடவுள் மீது ஆணையாக சொல்கிறேன் என் வீட்டிலுருந்த லைட்டரை காணவில்லை. அது எப்படி எங்கே சென்றது என்றும் தெரியவில்லை. எனவே யாரேனும் எங்கேனும் காண்டால் தயவு கூர்ந்து உடனே என்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தற்சமயம் தங்களின் கருத்துக்களை என்னிடம் தெரிவிக்கலாம்.


P.S. யாரேனும் இதைப் படித்துவிட்டு மகிழவில்லை என்றால், மறுபடி முதலில் இருந்து படிக்கவும். கருணையே உருவமான கடவுள் மீது அது நாள் வரை இருந்த நம்பிக்கை சென்று இவனையெல்லாம் ஏன்டா இன்னும் சுனாமி தூக்கலைனு நினைப்பீங்க. நாத்திகராவும் மாறிடுவீங்க.